ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்நிலையில் உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு வருகை புரிந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோரை ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்பத்தில் சுமூகமாக சென்றுகொண்டிருந்த பேச்சுவார்த்தை பின்னர் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
உலகத் தொலைக்காட்சிகளின் கேமராக்கள் முன்பாகவே அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் உக்ரைன் அதிபரை வெளிப்படையாக கண்டித்தனர். உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் போரை ராஜதந்திர நகர்வுகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஜெலன்ஸ்கியிடம் கூறியபோது பதற்றம் அதிகரித்தது. "எப்படிப்பட்ட ராஜதந்திரம்?" என்று ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பினார்.
ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்பாகவே வாதிடுவது அவமரியாதை என்று ஜெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறினார். மேலும், டிரம்ப்பின் தலைமைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அறையில் இருந்த பத்திரிகையாளர்கள் ஓர் அசாதாரண நிகழ்வை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"நீங்கள் போதும் போதும் எனும் அளவுக்குப் பேசிவிட்டீர்கள். நீங்கள் இதில் வெல்லவில்லை," என்று ஒரு கட்டத்தில் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார். "நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து நீடித்திருக்க உங்களிடம் ஏதும் இல்லை " என்றார் டிரம்ப்.
அதற்கு ஜெலன்ஸ்கி "நான் விளையாடவில்லை. நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் அதிபர் அவர்களே. நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர் " என்று பதிலளித்தார்.
"நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடியுடன் விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது நாட்டிற்கு இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது. இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறையாவது 'நன்றி' என்று சொன்னீர்களா? இல்லை," என்று டிரம்ப் பதிலளித்தார்.
அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் தனது தலையில் கைகளை வைத்துக்கொண்டு அந்த நிகழ்வுகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார்.
வெள்ளை மாளிகையில் இதுபோன்ற ஒரு காட்சியை இதற்கு முன்பு கண்டதில்லை என்று பலர் தெரிவித்தனர். செய்தியாளர்கள் ஓவல் அலுவலகத்தை விட்டு வெளியேறியதும் பலர் அதிர்ச்சியில் அசையாமல் நின்றனர். பின்னர் தலைவர்களின் சந்திப்பில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை முழுமையாக வெள்ளை மாளிகையில் உள்ள பத்திரிகையாளர் அறையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த வார்த்தை மோதல் காரணமாக அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கையெழுத்தாக இருந்த முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த சம்பவம் அமெரிக்க - உக்ரைன் உறவில் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.