மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தில் வலசைப் பறவைகள் வருகை!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியோரத்தில், குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்திற்கு, தற்போது வலசைப் பறவைகள் வருகை தந்துள்ளன. இந்த சரணாலயம், மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை எழில்மிகு இடங்களில் ஒன்றாகும். குறிப்பிட்ட காலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்குவது வழக்கம்.


இந்த ஆண்டு, ஆஸ்திரேலிய வெள்ளை அரிவாள் மூக்கன் (Australian White Ibis) என்ற பறவையினமும், நியூசிலாந்து நாட்டிற்குரிய சில பறவைகளும் இங்கு வந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பறவைகள், இனப்பெருக்கத்திற்காக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த சரணாலயத்திற்கு வருகின்றன. இனப்பெருக்கம் முடிந்ததும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தங்கள் குஞ்சுகளுடன் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றன.

இந்த சரணாலயம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு முக்கியமான அடையாளமாக திகழ்கிறது. இது, பல அரிய பறவை இனங்களின் வாழ்விடமாகவும், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. எனவே, குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சரணாலயத்தை முறையாகப் பராமரிப்பதன் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு இதன் அழகையும், பறவைகளின் முக்கியத்துவத்தையும் கொண்டு சேர்க்க முடியும்.



Previous Post Next Post