யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விரிவுரைகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (27) முதல் காலவரையற்ற விரிவுரைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசரக் கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கலைப் பீடாதிபதி பதவி விலகினார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இது குறித்துப் பல கருத்துக்கள் வெளிவந்தன. இதனையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கலைப்பீடத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், மீறல்கள், வன்முறைகள், கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்கள், உடைமைச் சேதம் போன்ற சீரழிவான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறியது குறித்துப் பல உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். திட்டமிட்ட விசாரணைகளில் தாமதம் செய்து மாணவர்கள் தண்டனையிலிருந்து தப்ப நிர்வாகம் வழிவகுப்பதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தண்டனையின் நோக்கம் மாணவர்களைப் பகை கொள்வதல்ல என்றும், அவர்கள் செய்யும் தவறுகளை உணர்ந்து எதிர்காலத்தில் சரியாகச் செயல்பட ஊக்குவிப்பதே என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திங்கள்கிழமை அடையாள வகுப்புப் புறக்கணிப்பிலும், செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பிலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள் பின்வருமாறு:

1) ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற ராஜினாமா செய்த கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்க வேண்டும். மேலும், அவரது ராஜினாமாவை திரும்பப் பெற்று, மீண்டும் பீடாதிபதி பொறுப்பை ஏற்கும் சூழலை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.

2) மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக சமீபத்தில் நடந்த பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

3) ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தும், நடவடிக்கைகள் எடுக்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்துதல், நிர்வாகத் தவறுகள் மூலம் மாணவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் நிர்வாகத்தின் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

4) கணித புள்ளியியல் துறையின் பூட்டை உடைத்த இரு மாணவர்கள் தொடர்பான விசாரணையை தாமதப்படுத்திய பல்கலைக்கழக அதிகாரிகளிடமும், கலைப் பீட சம்பவங்களை தாமதப்படுத்தும் நபர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டை நாட ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

5) கலை மற்றும் அறிவியல் பீடங்களில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்ட மாணவர்களை தண்டிக்கத் தவறிய பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் மீது ஆசிரியர் சங்கம் நம்பிக்கை இழந்துள்ளது. எனவே, வெளிவாரி உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும். புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். இது தொடர்பான விண்ணப்பம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.

இந்த ஐந்து கோரிக்கைகள் அடங்கிய கடிதம், இன்றைய கூட்ட தீர்மானத்தின்படி, துணைவேந்தர் மற்றும் அனைத்து பீடாதிபதிகளுக்கும் ஆசிரியர் சங்கத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

Previous Post Next Post