ஜனாதிபதி தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா சென்றடைந்தார்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (15) பிற்பகல் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டார். டிசெம்பர் 17 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
ஜனாதிபதி திஸாநாயக்க தனது விஜயத்தின் போது பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இந்திய துணை ஜனாதிபதி திரு ஜகதீப் தன்கர், வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், புதுடெல்லியில் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பது இந்த விஜயத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். மகத்தான ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான போத்கயாவிற்கு பயணத்துடன் விஜயம் முடிவடையும்.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் சென்றுள்ளனர்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (15) மாலை 5.30 மணியளவில் இந்தியா வந்தடைந்தார். புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வழியாக அவரை இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் டாக்டர். எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கூடுதல் செயலாளர் புனித் அகர்வால், நெறிமுறைத் தலைவர் அன்ஷுமன் கவுர் மற்றும் பல இராஜதந்திர அதிகாரிகள் வரவேற்றனர்.
ஜனாதிபதியின் வருகை குறித்து இந்திய ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டன. புதுடெல்லியின் முக்கிய சுற்றுவட்டங்களில், விளம்பர பலகைகள் ஜனாதிபதி திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை அடையாளப்படுத்தும் வகையில் இருவரின் படங்களையும் காட்சிப்படுத்தியிருந்தன.
இன்று மாலை ஜனாதிபதி திசாநாயக்க, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோருடன் கலந்துரையாட உள்ளார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.