பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற மரியாதை நிகழ்வின் போது இலங்கைக்கான நோர்வே தூதுவர் H.E. May-Elin Stener அவர்களை சந்தித்தார் .
வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரிச் சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற முக்கிய தலைப்புகளை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுப் பங்காளித்துவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. கலாநிதி அமரசூரிய இலங்கையின் கல்வி முறையை மாற்றுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் மேம்பட்ட பொதுச் சேவையை வழங்குவதற்கான ஆட்சியின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கூறினார்.
பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சகரிகா போகஹவத்த மற்றும் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி குணசேகர உட்பட நோர்வே தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.