தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
நடிகர் விஜய், மாநாட்டில் கலந்து கொண்டு, திடலில் உள்ள ரசிகர்களுடன் நேரில் சந்தித்தார். பின்னர், கட்சியின் கொள்கைகளை விளக்கும் காணொளி ஒன்று திரையிடப்பட்டது, இதில் கட்சி ‘மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்’ கொண்டதாக குறிப்பிடப்பட்டது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அதன் தலைவர் மற்றும் நடிகர் விஜய் உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது, "அரசியல் என்பது ஒரு பாம்பு, அதை பயமின்றி ஒரு குழந்தை போல கையில் பிடித்து விளையாடுகிறேன்.
மற்றவர்கள் என்னை அரசியலில் ஒரு குழந்தை என்று கூறுகிறார்கள். ஆனால் பாம்பைப் பார்த்தால் எனக்கு பயமில்லை. அரசியல் என்பது சினிமா அல்ல இது ஒரு போர்க்களம். சிரிப்புடன் சீரியசாக எண்ணங்களை செயல்படுத்துவது தான் எனது வழி என கூறினார்.
அரசியல் முற்றிலும் மாறவேண்டும் என குறிப்பிட்ட அவர் மற்ற அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவதில் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதற்கும் நான் தயாராக இல்லை" என்றார்.
இப்போது என்ன சிக்கல் உள்ளது மற்றும் அதற்கான தீர்வு என்ன என்பதை கூறினால், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இன்று உள்ள தலைமுறையை நன்கு புரிந்துகொண்டால் முன்னேற்றத்தை எளிதாக அடையலாம் என்றார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் குறித்து அவர் உரையாற்றினார். காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாக செயல்பாடு மற்றும் அம்பேத்கரின் வகுப்புவாத பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்துவது, சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பது என்பதே நமது நோக்கம். வீரமங்கை வேலுநாச்சியாரும் த.வெ.கவின் கொள்கை வழிகாட்டியாக செயல்படுவார். பெண்களை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட முதல் கட்சி தவெக ஆகும். முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் சமூகத்தில் பிறந்த அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்" என விஜய் தெரிவித்தார்.
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார். ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அண்ணாவின் "ஒரே குலம், ஒருவனே தேவன்" என்ற கொள்கையை நாங்கள் பின்பற்றுவோம். அதாவது, ஒவ்வொரு மனிதரும் அவருக்கு விருப்பமான கடவுளை வழிபடலாம். இதில் கட்சி எந்த விதத்திலும் தலையிடாது. அதே சமயம், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும் என்று நடிகர் விஜய் கூறினார்.
த.வெ.க-வின் கொள்கைகள் என்னவென்று மாநாட்டில் சம்பத்குமார் என்ற கட்சித் தொண்டர் அவற்றைப் பற்றி விளக்கினார்.
அவர் கூறியதாவது கட்சியின் கோட்பாடு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதாகும். கட்சியின் குறிக்கோள், ‘மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலினம், பொருளாதாரம் ஆகியவற்றால் தமிழக மக்கள் சுருங்கிவிடாமல் அனைத்து மக்களின் தனிமனித சமூகப் பொருளாதார அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி சமநிலைச் சமூகம் உருவாக்குவது’ என்கிறார். மேலும், “ஆட்சி, சட்டம், நீதி, அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தி மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிக்கும் மாநில ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவது” என்பது கட்சியின் கொள்கை என அவர் கூறினார்.
இடஒதுக்கீடு குறித்து பேசும் போது, அவர் ‘விகிதாச்சார இடப்பங்கீடு’ என்பது உண்மையான சமூகநீதியாகும் என்று கூறினார். “சாதி ஒழியும்வரை, அனைத்து பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
“பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சமத்துவம் வழங்கப்படும்” என்றார்.
மேலும், மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகளை மீட்கவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை பின்பற்றவும் கட்சியின் கொள்கை எனக் கூறினார்.
மாநாடு மாலை 4 மணிக்கு தொடங்கியது. கொடியேற்றத்திற்குப் பிறகு, கட்சித் தலைவர் விஜய்க்கான பாடல் வெளியிடப்பட்டது.
குறைந்தது 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையயில் இலட்சங்களில் மக்களின் வருகை இருந்தது, 8 பிரிவுகளில் 7ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேடையின் இரண்டு புறங்களிலும் தண்ணீர் டேங்குகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.